பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்-மொத்தம் 2,144 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட ஊராட்சிகளில். நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், மொத்தம் 2,144 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதில், இந்த ஆண்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சி, தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சி, ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட ஆனைமலை ஒன்றியத்தில் 19 ஊராட்சி என மொத்தம் 84 ஊராட்சிகளில், சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம், அந்தந்த ஊராட்சி தலைவர்கள் முன்னிலையில் நடந்தது.

ஆனைமலை ஒன்றியம், சுப்பேகவுணடன்புதூர் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், துணை கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் கலந்து கொண்டு, கிராம சபையின் நோக்கம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சிகளில் நடந்த கிராமசபா கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை தடை செய்தல், டெங்கு தடுப்பு நடவடிக்கை, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைத்தல், ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டி நடத்துவது. சுகாதாரமான குடிநீர் வினியோகம் ஆகியவை பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டத்தில் 2 ஆயிரத்து 94  ஆண்கள், 3 ஆயிரத்து 435 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 529 பேர் கலந்துகொண்டனர்.  தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 26 ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டத்தில் 1,730 ஆண்கள், 2,325 என 4 ஆயிரத்து 55 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 689 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுபோல ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டத்தில் 1,484 ஆண்கள்,  1,934 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 418 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 389 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தாலுகாவிற்கு உட்பட்ட 3 ஒன்றியங்களிலும் நடந்த கிராம சபை கூட்டத்தில் மொத்தம் 2,144 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், விரிவு அலுவலர்கள் நேரில் கண்காணித்தனர். இந்த கூட்டங்களில் ஊராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, வரவு செலவு குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

ஊராட்சிகளில் ஒவ்வொரு முறையும் நடக்கும் கிராமசபை கூட்ட செலவு தொகை அதிகபட்சமாக ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், நடப்பாண்டு நேற்றைய கிராம சபை கூட்டத்திலிருந்து, கிராமசபை கூட்டம் நடத்துவதற்கான செலவு தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து இதற்கு, பல்வேறு ஊராட்சி நிர்வாகத்தினர், தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: