கரூரில் 75வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் 59 பயனாளிகளுக்கு ரூ1.கோடியில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் வழங்கினார்

கரூர் : கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, 59 பயனாளிகளுக்கு ரூ. 1கோடியே 1லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான பன்களையும் பறக்க விட்டார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் முன்னிலை வகித்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், பள்ளிக்கூட மணியடிச்சாச்சு திட்டம், கலங்கரை விளக்கம் திட்டம் விடியல் வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 405 நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்ட. மேலும், சிறந்த விவசாயி, சிறந்த தொழில் முனைவோர், தீண்டாமை இல்லாத கிராமம், குழந்தை திருமணம் நடைபெறா கிராமம் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும், வருவாய்த்துறையின் சார்பில் வீட்டுமனை பட்டா 8 நபர்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை 12 நபர்களுக்கும், ஆதரவற்ற விதவை சான்று 2 நபர்களுக்கும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2 நபர்களுக்கும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கும், யூ.ஒய்.ஜி.பி திட்டத்தின் சார்பில் 3 குழந்தைகளுக்கும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் 6 நபர்களுக்கும், சமூதாய திறன்பள்ளி 2 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தொகுப்பு வீடு அமைத்தல் 4 நபர்களுக்கும், தனிநபர் உறிஞ்சி குழி அமைத்தல் 13 நபர்களுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் சார்பில் 2 நபர்களுக்கும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்விக் கடனுதவி 3 நபர்களுக்கும் என 59 நபர்களுக்கு ரூ. 1கோடியே 1லட்சத்து 26ஆயிரத்து 255 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்.

மேலும், 2022ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில், கரூர் இசைப்பள்ளி, கரூர் கல்வி மாவட்டத்தின் சிலம்பம், பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரணி பார்க் பள்ளி உள்ளிட்ட 10 பள்ளிகளை சேர்ந்த 363 மாணவ, மாணவிகள் மற்றும் 34 ஆசிரியர்கள் என மொத்தம் 396 நபர்கள் பங்கு கொண்ட கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், ஆயுதப்படை மற்றும் பயிற்சி காவலர்கள் சார்பில் சிலம்பம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்தும், மாயனூர் நந்தகுமார் மற்றும் பயிற்சி காவலர்களின் கராத்தே நிகழ்ச்சி குறித்தும், மாவட்ட துப்பறிவு மோப்ப நாய் படை மற்றும் குழுவினரின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து அரசு அலுவலர்களுக்கான 100மீ, 200மீ போட்டி மற்றும் கூடைப்பந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, சுதந்திர போராட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கரூர் வாங்கப்பாளையத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி முத்துச்சாமி என்கிற காளிமுத்து என்பவரின் வீட்டுக்கு சென்று, அவரது மனைவி பழனியம்மாளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குநர் மந்திராச்சலம், நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், கோட்டாட்சியர்கள் ரூபினா, புஷ்பாதேவி உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: