×

போதை பொருட்கள் கடத்தலில் அதிமுகவினர் பலர் சிக்குவார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர்: போதை பொருட்கள் கடத்தலில் அதிமுகவினர் பலர் சிபிஐ விசாரணையில் சிக்குவார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக நிதி அமைச்சர் கார் மீது செருப்பு வீசி இருப்பது பாஜவின் பண்பை காட்டுகிறது. டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நேரம் கிடைத்தால் பிரதமரிடம் மேகதாது அணை தொடர்பாகவும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிவிட முடியாது.

அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கி வீடு கட்டிக் கொடுக்கப்பட்ட பின்னரே ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நீதிமன்றம் அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டாம் என கூறுகிறது. ஆனால் மக்கள் மத்தியில் சென்று பார்ப்பவர்களுக்குதான் அதன் நிலை தெரியும். அதிமுக ஆட்சியில்தான் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டுள்ளது. இதில் அதிமுகவினர் பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்குகள் அதிமுக ஆட்சியில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது திமுக அரசு அந்த வழக்குகளை சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுகவினர் பலர் சிக்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Minister ,Duraimurugan , Many AIADMK members will get involved in drug trafficking: Minister Duraimurugan interview
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...