×

சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங்-5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்தடைந்தது

கொழும்பு: சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங்-5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்தடைந்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, செயற்கைகோள்களை கண்காணிக்கும் அதிநவீன வசதிகளைக் கொண்ட சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பல் இலங்கையின் அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு வருவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக, கப்பல் வருவதை ஒத்திவைக்க வேண்டுமென இலங்கை அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு முன்பாக, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சீன உளவு கப்பல் வந்து விட்டதால், நேற்று முன்தினம் அம்பந்தொட்ட துறைமுகம் அருகே அது வந்தடைந்தது.

இதற்கு இலங்கை துறைமுக அதிகாரிகள் இன்னும் அனுமதி வழங்காததால், துறைமுகத்தில் இருந்து 600 நாட்டிகல் மைல் தூரத்தில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் அது துறைமுகத்துக்குள் வராமல், அங்கேயே நிற்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் ‘பிஎன்எஸ் தைமூர்’ என்ற போர் கப்பலம் நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது. அதிநவீன வசதிகள் கொண்ட இந்த போர்க்கப்பலை சீனா தயாரித்து அளித்துள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லும் வழியில் இந்த கப்பல் கொழும்பு வந்துள்ளது.

வரும் 15ம் தேதி இந்த பாகிஸ்தான் கப்பல், கராச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு முன்பாக, அக்கப்பலுடன் இலங்கை கடற்படை பயிற்சியிலும் ஈடுபட உள்ளது. ஏற்கனவே, இக்கப்பல் மலேசியா, கம்போடியா நாடுகள் வழியாக வந்த போது அந்நாடுகளின் கடற்படையுடன் போர் பயிற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, ஒரே நேரத்தில் சீனா, பாகிஸ்தான் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு மிக அருகில் வந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இக்கப்பல்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தவிக்கும் இலங்கை: சீன உளவு கப்பல் திட்டமிட்டபடி அம்பாந்தொட்ட துறைமுகத்திற்குள் நுழையவில்லை என துறைமுக அதிகாரிகள் நேற்று கூறினர்.

ஆனாலும், சீன கப்பல் வரும் 17ம் தேதி வரை இலங்கையில் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, பல்வேறு அரசியல் பிரச்னையிலும் சிக்கி இருக்கிறது. இந்த நிலையில், சீன, பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் வருகை, இந்தியாவின் எதிர்ப்பு போன்ற புதிய சிக்கல்களால் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங்-5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்தடைந்தது.


Tags : China ,Sri Lanka ,Ambantota port , China's spy ship 'Yuan Wang-5' has arrived at Sri Lanka's Ambantota port
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்