கடல் அலையில் சிக்கி மாயமான 4 பேரில் இருவர் உடல் கரை ஒதுங்கியது

திருவொற்றியூர்: திருவொற்றியூரில்  கடலில் குளிக்கச் சென்று  அலையில் சிக்கி மாயமான 4 பேரில் ஒரு பெண் உள்பட 2 பேர் உடல் கரை ஒதுங்கியது. சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கரீம். தையல் கலைஞர். இவரது மனைவி அசின்.  நேற்று முன்தினம் காலை அசின், தனது மகள் அபிரின் (18). மகன் அபான் (16), உறவினர் கபீர் (24) அபான் நண்பர் சபரி (16) உள்பட 9 பேருடன் திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே உள்ள கடற்கரையில் குளிக்க வந்தனர். பெண்கள் அனைவரும் கரையில் அமர்ந்திருக்க ஆண்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது  அபான், அபிரின், கபீர் மற்றும் சபரி ஆகிய நான்கு பேர் அடுத்தடுத்து ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதை பார்த்து கடற்கரையில் அமர்ந்து இருந்த அசின் மற்றும் உறவினர்கள் அலறி துடித்தனர். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், தீயணைப்பு துறை மீனவர்கள் உதவியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை படகு மூலம் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் சபரி, அபிரின் ஆகிய இருவரது உடல் மட்டும் எல்லையம்மன் கோயில் தெரு அருகே அடுத்தடுத்து கரை ஒதுங்கியது. இருவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மற்ற இருவரின் உடலை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: