செல்போன் பறித்துவிட்டு தப்ப முயன்றபோது பைக் மோதி ஆம்னி பஸ் எரிந்தது; 2 பேருக்கு வலை

தாம்பரம்: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில், தாம்பரம் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்துச் செல்லும் ஆம்னி பேருந்துகள் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். நேற்று அதிகாலை இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மீது,  குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழுந்து வேகமாக மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் தீப்பிடித்து, பின்னர் பேருந்தும் எரியத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை,  தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.

ஆனால், பைக், ஆம்னி பேருந்தும் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வடபழனியைச் சேர்ந்த சிவா (41) என்பவர், குரோம்பேட்டையில் தான் வேலை செய்யும் கேட்டரிங் நிறுவனத்திற்கு செல்வதற்காக வடபழனி பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது அவரிடம் 2 மர்மநபர்கள் செல்போனை பறித்தனர். பின்னர், அதேநபர்கள் காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (35) என்பவர் நேற்று அதிகாலை தனது அண்ணனை வழியனுப்ப சென்னை விமான நிலையம் வந்தபோது, விமான நிலைய நுழைவாயிலில் அருகே, அவரது செல்போனை பறித்துக்கொண்டு, அதிவேகமாக தாம்பரம் நோக்கி வந்துள்ளனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து பைக்  சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதும், இதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் கீழே குதித்து தப்பி ஓடிய நிலையில் வாகனத்தில் தீப்பிடித்து இருசக்கர வாகனம் மற்றும் பேருந்து ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது தெரியவந்தது. இதனை அடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: