புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாம்புரம் கிராமத்தில்  சென்னையின் 2வது சர்வதேச புதிய விமான நிலைய அமைக்க  12 கிராமங்களில் சுமார் 5000 விளை நிலங்கள்  எடுப்பு நடைபெற போவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சுங்குவார்சத்திரம் பகுதி அடுத்த ஏகனாபுரம், அக்கமாபுரம்,  மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிய வருகிறது. அதனால், அந்த கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தை முன்வைத்து விமான நிலையம் வருவதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

மேலும், இந்த கிராமத்தில் உள்ள வசதி போல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது என கூறி  எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும், நிலப் பகுதிகளையும் எடுப்பதை தவிர்த்து விட்டு, தமிழக அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் செய்து வருகின்றனர்.

அதனை ஒட்டி நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாபுரம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்து ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் உட்பட 200 க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மனதாக முடிவு எடுத்து தீர்மான புத்தகத்தில் கையொப்பம் இட்டனர். இதேபோல், இந்த பகுதிகளில் உள்ள 12 கிராமங்களிலும் விமான நிலையம் வருவதை எதிர்த்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற போவதாக தகவல் பரவியது. ஏகனாம்புரத்தில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: