போலீசில் இருந்து தப்பிய செல்போன் திருடன்கள்

பெரம்பூர்:  பொதுமக்கள் பிடித்து கொடுத்த செல்போன் திருடர்கள் போலீசுக்கு தண்ணி காட்டி சென்ற சம்பவம் திருவிக நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரவள்ளூர் கே.சி கார்டன் 6வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (36). சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கார்த்திக்கின் செல்போனை பிடுங்கிக் கொண்டு ஓட முயற்சி செய்தனர்.

அப்போது கார்த்திக் கூச்சலிட்டு அவர்களை பிடிக்க முற்பட்டார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் திருவிக நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த பரத் (20) மற்றும் கன்னிகாபுரம் முத்து தெரு பகுதியை சேர்ந்த சரவணன் (19) ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

அப்போது பொதுமக்கள் அடித்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் இருவரிடமும்  மறுநாள் காலை 10 மணிக்கு காவல் நிலையம் வருமாறு கூறி அனுப்பி வைத்தனர். மேலும் இரவு நேரங்களில் கைது செய்பவர்களை காவல் நிலையத்தில் வைக்கக் கூடாது என்ற விதி உள்ளதால் அவர்களை மறுநாள் வரும்படி வாய்மொழியாக கூறி அனுப்பி வைத்தனர். அவ்வாறு சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை. இதனால் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். இதில் பரத் என்பவர் மீது ஓட்டேரி புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: