ருஷ்டி மீது தாக்குதல் ஈரானுக்கு தொடர்பு?: வெளியுறவு அமைச்சகம் மறுப்பு

துபாய்: சல்மான் ருஷ்டி தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரானுக்கு தொடர்பில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாத்தானின் கவிதைகள் என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதிய சல்மான் ருஷ்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மரண தண்டனை அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை ஹதி மட்டார் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதில் ருஷ்டியின் கை நரம்பு, கண், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. தற்போது ருஷ்டி மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ருஷ்டி மீதான தாக்குதலுக்கு ஈரான் மீது சில நாடுகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், ருஷ்டி தாக்குதலுக்கும் ஈரானுக்கும் தொடர்பில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நசார் கானானி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘’சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் தாக்கப்பட்டதற்கு அவரும் அவரது ஆதரவாளர்களுமே காரணம். இந்த விவகாரத்தில் ஈரானை குற்றம் சாட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இது தொடர்பாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளை விட கூடுதல் தகவல்கள் ஈரானிடம் இல்லை. தாக்கியவரின் செயலைக் கண்டிப்பதாக கூறி, மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது முரண்பாடான செயல்” என்று தெரிவித்தார்.

Related Stories: