சென்னை உயர் நீதிமன்றத்தில் போலி ஆவணம்; சமர்ப்பித்த போலி வக்கீல் சிக்கினார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் போலி ஆவணம் சமர்பித்து தலைமறைவான போலி வழக்கறிஞரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கொளத்தூரைச் சேர்ந்த சாந்தி என்பவர், தான் தத்தெடுத்த மகனை ஒப்படைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் பல கோடி சொத்துக்காக ரம்யா என்பவரும், அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் பாபு என்பவரும், தன் மகனை கடத்தி சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த ஆட்கொணர்வு மனு கடந்த ஜூலை 28ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பாபு என்பவர் தான் ஒரு வழக்கறிஞர் எனவும், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டவியல் பட்டம் பெற்றதாக ஒரு போலி சான்றிதழை சமர்பித்துள்ளார். மேற்படி சான்றிதழை போலி என்று உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் போலி வழக்கறிஞர் பாபு மீது குற்ற வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய உத்தரவிட்டது.

மேலும் சாந்தி என்பவர் அளித்த புகாரின் அடிப்டையில் போலி வழக்கறிஞர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அறிந்து தலைமறைவான போலி வழக்கறிஞர் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, பொதுமக்கள் இவரை நம்பி ஏமாந்துள்ளார்களா என்பது குறித்தும், வேறு வழக்குகளில் வேறு யாராவது நபருக்காக போலி வழக்கறிஞர் ஆஜராகியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் தலைமறைவான போலி வழக்கறிஞர் பாபு (எ) பாபு சஞ்சீவி தஞ்சாவூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனிப்படை போலீசார் தஞ்சாவூர் மாவட்டம், மாணாங்கோரை என்ற இடத்தில் வைத்து அண்ணாநகர் மேற்கு விரிவு, காந்தி நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பாபு (எ) பாபு சஞ்சீவியை (55) கைது செய்தனர்.

Related Stories: