குன்றத்தூர் அருகே அடையாற்றில் விரிவாக்க பணிகள் துவக்கம்; நீர்வளத்துறை நடவடிக்கை

சென்னை: குன்றத்தூர் அருகே உள்ள அடையாற்றின் குறுகலான பகுதியை விரிவுபடுத்தும் பணியை நீர்வளத்துறை தொடங்கியுள்ளது. தாம்பரம் அடுத்த ஆதனூரில் துவங்கும் அடையாறு ஆறு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக பட்டினம்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. 42 கி.மீ தூரம் வரை உள்ள  இந்த அடையாறு ஆறு வரைபடம் அளவின் படி, ஆற்றின் அகலம் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றார்போல், 60 முதல் 200 அடி என்ற அளவு கொண்டது. ஆனால், கரையோரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் விளைவாக, அகலம் 20 முதல் 100 அடியாக சுருங்கியது. இதனால், பரவலாக மழை பெய்தாலே ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. 2015ல் பெய்த கன மழையில், ஆற்றில் அதிகபட்ச அளவை காட்டிலும், 10 அடி உயரத்திற்கு வெள்ளம் ஓடியது.

இதனால், கரையோர குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. அதுபோன்ற ஒரு பாதிப்பு மீண்டும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, 2016ல், ஆதனூர் முதல் மணப்பாக்கம் வரை, 22 கி.மீ., தூரத்திற்கு அடையாறு ஆற்றை, அதன் முழு அளவிற்கு அகலப்படுத்தி, ஆழப்படுத்தினர். முழு அளவிற்கு அகலப்படுத்தினாலும், பல இடங்களில் குறைந்த அகலத்திலேயே உள்ளது. அதனால், கன மழையின் போது, கிளை கால்வாய்கள் வழியாக வரும் தண்ணீர், குறைந்த அகலம் உள்ள இடத்தில் தடைப்பட்டு, கால்வாயில் இருந்து வெளியேறுகிறது. அதுபோன்ற நேரத்தில், ஆற்றை ஒட்டியுள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன.

கடந்தாண்டு பருவ மழையின் போது, வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆய்வு செய்தார். அப்போது, வெள்ளம் தேங்குவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, வெள்ள தடுப்பு சிறப்பு அதிகாரி, இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். இதைதொடர்ந்து, அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி, அகலப்படுத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, குன்றத்தூர் அருகே 1.25 கி.மீ., தூரத்தில் 200 மீ., பகுதியை அகலப்படுத்தும் பணியை நீர்வளத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மீதமுள்ள 1 கி.மீ. தூரத்துக்கு 12.6 ஏக்கர் காலி நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அனகாபுத்தூர் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை பயன்படுத்தி அகலப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளனர். காலியாக உள்ள மற்ற நிலங்களை கையகப்படுத்தும் பணியை தொடங்க, அரசு உத்தரவுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: