இந்திய ராணுவத்துக்கு எதிரான கருத்து ஆமிர்கான் மீது போலீசில் புகார்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தை குறை சொல்லும் விதமாக லால் சிங் சட்டா படம் உள்ளதாக கூறி ஆமிர்கான் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

ஆமிர்கான் நடித்து, தயாரித்துள்ள படம் லால் சிங் சட்டா. அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 11ம் தேதி திரைக்கு வந்தது. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால், டெல்லி போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘லால் சிங் சட்டா படத்தில் மனநலம் சரியில்லாத நாயகன் (ஆமிர்கான்) இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படுவதாகவும் அவரை கார்கில் போருக்கு அழைத்து செல்வது போலவும் காட்டப்பட்டுள்ளது. கார்கில் போருக்கு பயிற்சியில் முதன்மை இடம் பிடித்த வலுவான, மனதிடம் பொருந்திய, தகுதி வாய்ந்த வீரர்களைத்தான் இந்திய ராணுவம் அழைத்து சென்றது.

ஆனால் படத்தில் இந்திய ராணுவத்தை குறை கூறும் விதமாக இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், இந்த படம் இந்து மதத்துக்கு எதிராகவும் உள்ளது. ஒரு காட்சியில் சாமியை கும்பிட ஒருவர் கூறும்போது,‘பூஜையெல்லாம் மலேரியா நோய் போன்றது’என ஆமிர்கான் கூறுகிறார். இதனால் ஆமிர்கான் மீது இந்திய ராணுவத்தை குறை கூறியதற்காகவும் இந்து மதத்தை இழிவுபடுத்தியதற்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்’என கோரியுள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: