விளையாட்டு போட்டிகளோடு திறனாய்வு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவு பணிச்சுமையால் திண்டாடும் உடற்கல்வி ஆசிரியர்கள்: காலியிடங்கள் நிரப்பப்படுமா?

நெல்லை: பள்ளிக்கல்வித்துறையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பல்ேவறு பணிகளை ஒரே சமயத்தில் அளிப்பதால், அவர்கள் பணிச்சுமையால் திண்டாடி வருகின்றனர். பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே இல்லாத சூழலை போக்கிட பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள 16 ஆயிரத்து 491 பள்ளிகளுக்கும் சென்று உடற்கல்வி ஆசிரியர்கள் உலக திறனாய்வு பணிகளை மேற்கொண்டு, வரும் செப்டம்பர் 8ம் தேதிக்குள் அதற்கான அறிக்கை தர வேண்டும் என பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குநர்(நாட்டு நலப்பணி) உத்தரவிட்டுள்ளார்.

உலக திறனாய்வு பணி என்பது ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 மீ, 800 மீ போட்டிகளை நடத்துவதோடு, குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளையும் நடத்தி முடிக்க வேண்டும். தாங்கள் பணியாற்றும் பள்ளியிலும், அதுதவிர உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளிலும் திறனாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால் உடற்கல்வி ஆசிரியர்கள் சிரமத்திற்கு இடையே இப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு முதல்முறையாக இவ்வாண்டு பாரதியார் தின விளையாட்டு போட்டிகளையும், குடியரசு தின விளையாட்டு போட்டிகளையும் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் முதல் வாரத்திற்குள் குறுமைய அளவில் பழைய மற்றும் புதிய விளையாட்டுகள் தலா 12ஐ நடத்தி முடித்திட பள்ளிக்கல்வி துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அக்டோபர் முதல் வாரத்திற்குள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் இந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி முடிப்பதில் தற்போது தீவிரமாக உள்ளனர். ஒரே சமயத்தில் குறுமைய போட்டிகளையும், உலக திறனாய்வு போட்டிகளையும் நடத்துவது இயலாத நிலையில், ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெரியதுரை கூறுகையில், ‘‘தமிழகத்தில் இப்போது உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1மற்றும் 2 என மொத்தம் 6552 பேர் மட்டுமே உள்ளனர். ஆனால் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என பள்ளிகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 491 ஆக உள்ளது. கிட்டத்திட்ட 10 ஆயிரம் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரே இல்லை என்ற நிலை காணப்படுகிறது. மேலும் 40 ஆயிரம் பேர் உடற்கல்வி முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

எனவே ஒவ்வொரு பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமிக்கும் வகையில் புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கேட்டுக் கொள்கிறோம். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இப்போது ஒரே மாதத்தில் குறுமைய போட்டிகளையும், உலக திறனாய்வு போட்டிகளை நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பல பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே உலக திறனாய்வு போட்டிகளை வரும் ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: