தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் கோரி மகள் அளித்த மனுவை பரிசீலிக்க கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி சுதந்திர போராட்ட வீரரின் மகள் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்குமாறு கோவை மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் நாராயணன் நம்பியார், தியாகிகள் ஓய்வூதியம் பெற்று வந்த நிலையில் கடந்த 1992ல் மரணமடைந்தார். அதன் பின்னர், அவரது மனைவி கல்யாணியம்மா, தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தார்.  அவரும் கடந்த 1995ம் ஆண்டு இறந்த நிலையில், தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியத்தை வழங்கக் கோரி அவரது மகள் வல்சலா அரசுக்கு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011ம் ஆண்டு எனது தந்தை இறந்து விட்டார். அவரது வருமானத்தை மட்டும் நம்பி இருந்த நிலையில் தற்போது எந்த வருவாயும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, தந்தை நாராயணன் நம்பியாரின் ஒரே வாரிசாக உள்ள எனக்கு தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுதாரர் வல்சலாவின் கோரிக்கை மனுவை 8  வாரங்களில் பரிசீலிக்க வேண்டும். தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் பெற வல்சலாவுக்கு தகுதி இருந்தால், அவருக்கு பென்ஷன் வழங்க ஒன்றிய உள்துறைக்கு அவரது பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: