திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது: 26ம் தேதி தேரோட்டம்

திருச்செந்தூர்:  அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நாளை  தொடங்கி வரும் 28ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. நாளை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்குள் கொடியேற்றும் வைபவம் நடக்கிறது.

வரும் 21ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிவன்கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. 23ம் தேதி 7ம் திருவிழா அன்று காலை 5.30 மணிக்குள் சுவாமி சண்முகர் உருகு சட்டசேவையும், 8.45 மணிக்கு சண்முகவிலாசத்தில் இருந்து சுவாமி வெற்றிவேர் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி வீதியுலா வருகிறது.

8ம் திருவிழாவான 24ம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி வெள்ளி சப்பரத்திலும், காலை 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தியில் எழுந்தருளுகிறார். 26ம் தேதி 10ம் திருவிழா அன்று காலை 6.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வருகின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: