வேலூர் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது; காட்டின் நடுவே விமரிசையாக நடந்த வன பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா: 5,000 பக்தர்கள் திரண்டனர்

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அருகே காட்டுக்கு நடுவே அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண் தரையில் படுத்து வழிபாடு செய்தனர்.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த தீர்த்தம் கிராமத்தில் காட்டுக்கு நடுவே சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் முதன் முதலில் குடியேறிய பழங்குடியின மக்கள் உணவுக்காக அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்று கிழங்கு, பழங்கள், கீரை வகைகளை கொண்டு வந்து சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். இதுவே அவர்களின் உணவு முறை பழக்க வழக்கமாக மாறியது.

இந்த காட்டு பகுதியில் அதிகமாக மரவள்ளி கிழங்கு தான் கிடைக்குமாம். இதையடுத்து ஒரு நாள் வழக்கம் போல் அப்பகுதி மக்கள் கிழங்கு எடுக்க காட்டுக்கு நடுவே சென்று ஒரு இடத்தில் தோண்டியுள்ளனர். அப்போது, அவர்கள் கிழங்கிற்காக தோண்டிய பள்ளத்தில் இருந்து திடீரென ரத்தம் சொட்ட தொடங்கியுள்ளது. அப்போது, அம்மன் போல் உருவம் தோன்றி ‘நான் இங்கு தான் இருக்கிறேன், இங்கு மட்டும் தான் இருப்பேன், உங்களை காப்பேன்’ என்று ஒரு குரல் கேட்டதாம். இதனால், அங்கு அவ்வப்போது பூஜை செய்து வழிபட தொடங்கியுள்ளனர்.

பின்னர், படிப்படியாக முழுக்க முழுக்க மூங்கில்களால் மட்டுமே கோயில் போல் இயற்கையாக அரண் அமைந்துள்ளது. இதனை பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போன பழங்குடியின மக்கள் அன்று முதல் இன்று வரை சுமார் 500 ஆண்டுகளாக பூஜை செய்து வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வன பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நேற்றுமுன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக ஊர் மக்கள் பால் குடம் ஏந்தி வந்து கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயிலுக்கு ஆந்திரா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களில் இருந்து காலை முதலே பக்தர்கள் வர தொடங்கி விட்டனர்.

திருவிழாவில் ஒடுகத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர், வேண்டுதலுக்காக ஆடு, கோழி பலியிட்டு தங்களின் நேர்த்தி கடன் செலுத்தினர்.

மேலும் குழந்தை வரம் வேண்டி பெண்கள் வினோத வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி குழந்தை இல்லாதோர், திருமணமாகாத பெண்கள் மண் தரையில் வரிசையாக படுத்து சுவாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது ஏறி சாமியாடியபடி அருள்வாக்கு கூறப்பட்டது. அதேபோல், வழி நெடுகிலும் பக்தர்களுக்கு மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. கோயிலில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேப்பங்குப்பம் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: