அரசு, நாடாளுமன்றம், நீதித்துறை சமம், நீதி வழங்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கே உள்ளது; தலைமை நீதிபதி ரமணா பேச்சு

புதுடெல்லி: ``நீதி வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இருப்பதாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது,’’என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி. ரமணா தெரிவித்தார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தி அமுத பெருவிழா நிறைவுற்று, 76வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி என்வி. ரமணா தேசியக் கொடி ஏற்றினார். பின்னர், அவர் பேசியதாவது: சமூக ஒழுங்கைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு.

இதன் மூலமே சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் நீதி வழங்கப்படுகிறது. அரசியலமைப்பு கட்டமைப்பின் கீழ், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு கடமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீதி வழங்குவது நீதிமன்றங்களின் பொறுப்பு ஆகும். நாட்டின் அரசியலமைப்பு நம்பிக்கையின் அடிப்படையில் அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகியவை சமமானவை ஆகும். நீதித்துறை மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

நீதிமன்றத்துக்கு போனால் நமக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பி மக்கள் நீதிமன்றங்களை நாடுகின்றனர். இது வழக்கை விசாரிக்கும் பலத்தை நீதிமன்றங்களுக்கு அளிக்கிறது. சட்டங்களை தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்றவாறு திருத்தி அமைப்பதன் மூலம் அவற்றுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. தவறு நடக்கும்போது, நீதித்துறை தங்களுக்கு ஆதரவாக நிற்கும் என்று மக்களுக்கு தெரியும். உலகின் மிகப் பெரிய ஜனநாய நாட்டில், உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: