ஈரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் முன் முன்னாள் ராணுவத்தினர் திடீர் உண்ணாவிரதம்

ஈரோடு: ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் மற்றும் விதவையர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால், இந்த போராட்டத்திற்கு ஈரோடு தெற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இருப்பினும், அந்த சங்கத்தினர் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் பழனியப்பன், விதவைகள் சங்க தலைவர் தீபா ஆகியோரை ஈரோடு தெற்கு போலீசார், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். இதையறிந்த முன்னாள் ராணுவத்தினர், ஈரோடு சூரம்பட்டி தெற்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர். அதனை ஏற்காததால், மாலை வரை உண்ணாவிரதம் தொடர்ந்தது. பின்னர், போலீசார் அழைத்து வந்த பழனியப்பன், தீபா ஆகியோரை விடுவித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: