×

நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் சிமோனா, புஸ்டா சாம்பியன்

டொரன்டோ: கனடாவில் நடந்த நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பாப்லோ புஸ்டா சாம்பியன் பட்டம் வென்றனர். மான்ட்ரியல் நகரில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பைனலில் போலந்தின் ஹூபர்ட் ஹுர்கஸ் (25 வயது, 10வது ரேங்க்) உடன் மோதிய  பாப்லோ கரெனோ புஸ்டா (ஸ்பெயின், 31வயது, 23வது ரேங்க்) 3-6, 6-3, 6-3 என்ற செட் வென்று முதல் முறையாக ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 45 நிமிடங்களில்முடிவுக்கு வந்தது.
டொரன்டோ நகரில் நடந்த  மகளிர் ஒற்றையர் பைனலில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (30வயது, 15வது ரேங்க்), பிரேசில் வீராங்னை பீட்ரிஸ் ஹடாட் மயா (26வயது, 24வது ரேங்க்) மோதினர்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் ஹாலெப் 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 16 நிமிடம் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். 2022 ஜனவரியில் மெல்போர்ன் ஓபன் பட்டம் வென்ற சிமோனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு  2வதாக டொரன்டோ ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டு நாட்டிங்காம், பர்மிங்காம்  ஓபன் பட்டங்களை வென்று அசத்திய மயா, டொரன்டோவில் 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார். தரவரிசையில் மாற்றம்: இந்தப் போட்டிக்கு பிறகு தரவரிசைப் பட்டியலில்  சிமோனா 9 இடங்கள் முன்னேறி  6வது இடத்தைப் பிடித்தார். மயா 8 இடங்கள் முன்னேறி 16வது இடத்தை பிடித்துள்ளார். ஏடிபி தரவரிசையில் புஸ்டா 9 இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்தார். ஹுர்கஸ் 10வது இடத்தில் நீடிக்கிறார்.

Tags : National Bank Open Tennis ,Simona ,Busta Champion , National Bank Open Tennis Simona, Busta Champion
× RELATED டொரன்டோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில்...