பிராண்டன் கிங் அதிரடி ஆட்டம்; வெஸ்ட் இண்டீசுக்கு ஆறுதல் வெற்றி

கிங்ஸ்டன்: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20ல் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள நியூசிலாந்து அணி, முதலில்  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டியிலும் அபாரமாக வென்ற நியூசி. 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டி கிங்ஸ்டன் நகரில் நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த நியூசி. 20 ஓவரில்  7 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 41 ரன் (26பந்து, 4பவுண்டரி, 2சிக்சர்) விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஒடியன் ஸ்மித் 3,  அகீல் உசைன் 2 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய  வெ.இண்டீஸ் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. பிராண்டன் கிங் 53 ரன் (35 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), டிவோன் தாமஸ் 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஷமார் புரூக்ஸ் 56 ரன் (59 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்),  கேப்டன் ரோவ்மன் பாவெல் 27 (15பந்து, 2பவுண்டரி, 2சிக்சர்)  ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக  பிராண்டன் கிங், தொடர் நாயகனாக கிளென் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடர் ஆக.17, 19, 21 தேதிகளில்  பார்படோசில் உள்ள  பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற உள்ளது.

Related Stories: