சுதந்திரதின விழாவுக்கு சென்று திரும்பியபோது மாநகர பஸ் மோதியதில் பிளஸ் 2 மாணவி பலி: குரோம்பேட்டையில் சோகம்

சென்னை: சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு, திரும்பிய பிளஸ் 2 மாணவி மாநகர பேருந்து மோதி, பலியான சம்பவம் குரோம்பேட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

சென்னை குரோம்பேட்டை அருகேயுள்ள நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமிஸ்ரீ (17). இவர், சிட்லப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று காலை பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு, சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அஸ்தினாபுரம் செல்லும் ராஜேந்திர பிரசாத் சாலையில், மாணவி சென்றபோது பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் நோக்கி வேகமாக வந்த மாநகர பேருந்து, மாணவியின் சைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால், மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் பின்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவி பரிதாபமாக பலியானார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சிட்லப்பாக்கம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவியின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

புகாரின்பேரில், குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்து டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர். சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பள்ளி மாணவி, விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: