தனியார் வங்கியில் 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளை கும்பல் தலைவன் முருகன் அதிரடியாக கைது; 32 மணி நேரத்தில் 4 பேர் கைது: 18 கிலோ தங்க நகைகள் மீட்பு

சென்னை: அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் மேலாளர் முருகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம் நடந்த 32 மணி நேரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை தொடர்ந்து தேடி வருவதாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலை ரசாக் கார்டன் பகுதியில் பெட்பேங்க் என்னும் தங்க நகைகளுக்கு பணம் கொடுக்கும் வங்கி மேலாளராக தி.நகரை சேர்ந்த சுரேஷ்(38) மற்றும் நகை மதிப்பீட்டாளர் விஜயலட்சுமி(36) உட்பட 3 பேர், 13ம் தேதி பணியில் இருந்தனர். பட்டப்பகலில் அவர்களை கட்டிப்போட்டனர். பின்னர், அவர்களிடம் இருந்த ‘ஸ்ட்ராங் ரூம்’ சாவியை எடுத்து அறையை திறந்து, அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர், போலீசாரின் தீவிர வேட்டையில், கொள்ளையர்கள் சந்தோஷ், பாலாஜி, செந்தில் குமார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேர் அளித்த தகவலின் படி இந்த கொள்ளையின் முக்கிய குற்றவாளியான முன்னாள் மேலாளர் முருகனை தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை சென்னை திருமங்கலம் பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய 1 பைக் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்து 32 மணி நேரத்தில் முக்கிய குற்றவாளி முருகன் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் ைகது செய்துள்ளனர்.  

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று காலை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அரும்பாக்கம் பெட் பேங்க் என்ற நிதி சேவை மையத்தில் கத்தி முனையில் ஊழியர்களை மிரட்டி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 11 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டு 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களும் இது எங்கள் நகைகள் தான் என்று வங்கி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மொத்தம் 7 பேர் ஈடுபட்டுள்ளனர். வங்கி கொள்ளையில் நேரடியாக 3 பேர் ஈடுபட்டுள்ளனர் . மீதமுள்ள 4 பேர் வெளியில் இருந்துள்ளனர். சம்பவம் நடந்த 20 நிமிடத்தில் வங்கிக்கு சென்று விட்டோம். அதேநேரம், சிசிடிவி பதிவுகள் மற்றும் விசாரணையில் காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்தாக எங்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும், அந்த குளிர்பானத்தை ஆய்வுக்காக சோதனை கூடத்துக்கு அனுப்பியுள்ளோம்.

முருகன் மற்றும் அவரது நண்பர்களான 6 பேர் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இதனால் தான் முருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 10 நாட்களாக திட்டமிடடு இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். திருட்டு சம்பவத்திற்கு பிறகு முக்கிய குற்றவாளி முருகன் தனது தலை முடியை வெட்டி போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

குற்றவாளிகள், நாங்கள் நகை கொள்ளையில் ஈடுபட போகிறோம் என்று அவர்களின் பெற்றோரிடம் சொல்லிவிட்டுதான் சென்றுள்ளனர். இது, அவர்களின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியபோது தெரியவந்தது. இது குற்றவாளிகளை வேகமாக பிடிக்க உதவியாக இருந்தது.

இதற்காக அவர்கள், 3 பைக்கில் வங்கிக்கு வந்தனர். ஆனால் அவர்கள் கொண்டு வந்த 3 பைகளில் 2 பைகளில் மட்டும் நகைகளை வைத்துள்ளனர். காலியாக இருந்த மற்றொரு பையை தெருவில் வீசிவிட்டனர். எனினும், அந்த பையில் நகைகள் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவர்கள் ஓரிரு நாட்களில் கைது செய்யப்பட்டு மீதமுள்ள நகைகள் மீட்கப்படும். தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது இதுவரை எந்த குற்ற வழக்குகளும் இல்லை. இது தான் அவர்களின் முதல் வழக்கு. இருந்தாலும், அனைவரையும் பிடித்தால் தான் முழு விபரங்களும் தெரியவரும் என்றார்.

Related Stories: