அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்தார் எடப்பாடி

சென்னை: 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என். ரவி, அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். ஓபிஎஸ் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பங்கேற்றார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இந்த விருந்தை புறக்கணித்தனர். தமிழக கவர்னர் ஆண்டுக்கு மூன்று முறை அதாவது புத்தாண்டு, குடியரசு தினம், சுதந்திர தின விழாவின்போது கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.

இந்த தேநீர் விருந்தில் முதல்வர், நீதிபதிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக  அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு  விடுத்து வழக்கம்.

இந்த நிலையில் நாட்டின் 76வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று மாலை தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

மேலும் சென்னை உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மெய்யநாதன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள். தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் ேக.எஸ்.அழகிரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விசிக சார்பில் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டனர்.

மேலும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். ஆனால் எடப்பாடி கே.பழனிசாமி இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துகொள்வதற்காக, அரசியல் தலைவர்கள்/ பாஜ கட்சி பிரமுகர்கள் என விசேஷ போர்டு வைக்கப்பட்டு பாஜவினருக்கு ஏராளமான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. எனினும் பாஜ சார்பில் செய்தி தொடர்பாளர்கள் இரண்டு பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

Related Stories: