கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். சுதந்திர தினம் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து சுமார் 2.50 லட்சம் பேர் சென்றனர். விடுமுறை முடிநந்ததால், அவர்கள் நேற்று முதல் மீண்டும் நகர்புறங்களுக்கு திரும்பினர். இதேபோல, கோவை, ஓசூர், வேலூர், நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிலர் கூடுதல் கட்டணங்களை விதித்தனர். அதாவது வழக்கமாக கோயம்புத்தூரில் இருந்து சென்னை வருவதற்கு அதிகபட்சமாக  ரூ.1200 வசூல் செய்து வரும் நிலையில், நேற்று ரூ.2500 முதல் ரூ.3000 வரை உயர்த்தப்பட்டு இருந்தது. அதேபோல் திருச்சியில் இருந்து சென்னை வருவதற்கு அதிகபட்சமாக ரூ.900 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ரூ.2800 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதேபோல் மதுரை, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி  உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக வசூலிக்கப்படும் தொகையை விட மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்த கட்டண வசூல் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயர்மட்ட குழு விசாரிக்கும் அமைச்சர் தகவல்: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ‘தமிழகத்தில் ஏற்கனவே கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றும் (நேற்று) சோதனைகள் நடைபெறும். மேலும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக போக்குவரத்து துறை சார்பில் உயர்மட்ட குழு அமைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். பொதுமக்களுக்கு தேவையான பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. எனவே மக்கள் அரசு பேருந்துகளை பயன்படுத்த முன்வர வேண்டும்’ என்றார்.

Related Stories: