ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேச்சு; சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: போலீசுக்கு பயந்து 13 நாள் புதுச்சேரியில் பதுங்கல்

சென்னை: ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், புதுச்சேரியில் கடந்த 13 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண நிறைவு விழா பொது கூட்டம் கடந்த 1ம் தேதி நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரான சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது,‘ ஸ்ரீரங்கம் கோயில் எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கனல் கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கனல் கண்ணன் மீது கலவரத்தை தூண்டுதல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது தெரிந்து கனல்கண்ணன் தலைமறைவானார். எனினும், கனல்கண்ணன் செல்போன் எண்களை வைத்து அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ரகசிய தகவல்களின் அடிப்படையில், கடந்த 13 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு தனிப்படை  கனல் கண்ணனை நேற்று அதிகாலை கைது செய்தனர். பிறகு கைது செய்யப்பட்ட கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  சென்னைக்கு அழைத்து வந்து, நீதிமன்ற உத்தரவுபடி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Related Stories: