×

முன்னாள் மாணவர்களால் மிளிரும் கொம்மடிக்கோட்டை அரசு பள்ளி: திறனாய்வு தேர்வுகளில் வாகை சூடும் மாணவர்கள்

கல்வி தான் ஒரு மனிதனின் பெரிய சொத்து என்று எண்ணிய முன்னாள் முதல்வர் காமராஜர், அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று விரும்பினார். எனவே தான், தனது ஆட்சிக்காலத்தில் ஊர்தோறும் கல்வி சாலைகளை திறந்தார். இதற்காக அவர் போட்ட விதையால் அறுவடையானவர்கள் கோடான, கோடிகள் உள்ளனர். ஆனால், அவர் போட்ட விதைக்கு தண்ணீர் ஊற்றியவர்கள் என்பது நாம் அறிந்திராத ஒன்று. காமராஜர் தனது ஆட்சி காலத்தில் புதிதாக பள்ளிகள் கட்டுவதற்கு அரசு நிலம் கிடைக்கவில்லை என்று வேதனைப்பட்டார். அப்போது, பள்ளி கட்ட நிலம் தர வேண்டும் என்று ஒவ்வொரு ஊரின் பெரியவர்களுக்கு காமராஜர் வேண்டுகோள் விடுத்தார். இதையேற்று ஊரின் பெரியோர் சிலர் தங்களது நிலத்தை தானமாக பள்ளிகள் கட்டுவதற்கு கொடுத்தனர். தாங்கள் படிக்காவிட்டாலும் தனக்கு பின் வரும் சந்ததிகள் கல்வியை கற்க வேண்டும் என்கிற பொதுநோக்கில் அவர்கள் செயல்பட்டனர்.  ஆனால், இங்கு ஒருவர் தன்னிடம் நிலம் இல்லாத போதும், பிறரிடம் உள்ள நிலத்தை வாங்கி அந்த நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்தார்.

அவர்தான் கொம்மடிக்கோட்டை சு.சந்தோசநாடார். அவர், கொடுத்த 6 ஏக்கர் நிலத்தில்தான் தற்போது கம்பீரமான கட்டிடங்களாக காட்சியளிக்கிறது சாத்தான்குளத்தில் கொம்மடிக்கோட்டை சு.சந்தோசநாடார் அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளி தனது வரலாற்றை தன்னகத்தே கொண்டு, என்ன நோக்கத்திற்காக காமராஜரும், சந்தோச நாடாரால் தொடங்கப்பட்டதோ அதன் நோக்கத்தை அடைந்து விட்ட பெருமையுடன் வீறுநடை போட்டு கொண்டிருக்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக சாத்தான்குளம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி மக்களுக்கு கல்வி அளிக்கும் அரசுப்பள்ளியாக தலை நிமிர்ந்து நிற்கிறது. இப்பள்ளி முன்னாள் மாணவர்களின் உதவியால் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 60 ஆண்டுகளில் இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் பல்வேறு அரசுப் பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களின் உதவியால் இப்பள்ளி பல மாற்றங்களை கண்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையில் ஆங்கிலவழியில் இலவசமாக கல்வி பயின்று வருகின்றனர். ஆரம்பக்கல்வியை  இலவசமாக பயின்று வரும் தொடக்க வகுப்புகளுக்கு என்று தனி கழிவறையை முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு கட்டி தந்தனர்.  கணினிவழித்தேர்வுகள் பிரபலமாகி வரும் இவ்வேளையில் தமிழக அரசால் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு இப்பள்ளி மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதி வருகின்றனர். நாம் படித்த பள்ளியில் ஆன்லைன் வழித்தேர்வு நடப்பதை அறிந்த இவர்கள் கணினி ஆய்வகம் குளுகுளுவென இருப்பதற்காக குளிர்சாதன வசதி செய்து கொடுத்தும் அசத்தினர். இப்பள்ளி மாணவர்கள் பலர் ஒன்றிய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை தேர்வுகளும் எழுதி வருகின்றனர்.

8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறனாய்வுத்தேர்வு,  9ம் வகுப்பு  மாணவர்களுக்கு ஊரக திறனாய்வுத்தேர்வு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு  தேசிய திறனாய்வுத்தேர்வு போன்ற  தேர்வுகளுக்காக தனியாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் கணித ஆசிரியர் தயாவதி ரோஜா புஷ்பம் மூலம் நடத்தப்படுகிறது. அவரின் இந்த அசராத உழைப்பால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சிப்பெற்று கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர். மாணவர்களின் திறன்களை வளர்க்கும் விதமாக பயிற்சி வகுப்பு நடத்தவும் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு அறக்கட்டளையின் மூலமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மென்திறன் வளர்ப்பு பயிற்சிகள் பள்ளியில் நடைபெறுகிறது. அறக்கட்டளையின் பயிற்சியாளர் ஜெகன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் முதன்முறையாகப் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேவையான திறன்களை வளர்க்கும் விதமாக பயிற்சி நடத்தினர்.

மாணவர்களின் பலம், பலவீனம் அறிதல், தொடர்பு கொள்ளும் திறன், தன்னம்பிக்கை வளர்த்தல், நகைச்சுவைத்திறன், வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுதல், தேர்வு நேர நிர்வாகம், எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக தங்களை மாற்றிக்கொள்ளுவதற்கு தேவையான ஆலோசனைகள் பயிற்சியில் வழங்கப்படுகிறது. இந்த அரசுப்பள்ளியை  தனியார் பள்ளிக்கு   நிகராக மாற்றி வரும் பள்ளியின் முன்னாள்  மாணவர்களின் இந்த அர்ப்பணிப்பு  உணர்வு இப்பள்ளியை  மேலும் வளர்ச்சியடைய உதவுகிறது என்றால் மறுப்பதற்கில்லை. இப்பள்ளி கடந்தாண்டு மாதிரி மேல்நிலைப்பள்ளியாக அரசால் அறிவிக்கப்பட்டது. தற்போது தர்மேந்திரராஜ் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பள்ளிக்கு தேவையான வசதிகள் அரசிடம் கேட்டு பெறுவதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kommadikota Government School , Kommatikottai Govt School shines with ex-students: Students take oath in Aptitude Tests
× RELATED தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது