சிறுத்தையிடம் கடி வாங்கிய பின் செத்தது போல் நடித்து உயிர் தப்பிய நாய்

உடுப்பி: கர்நாடகா மாநிலம் உடுப்பி அடுத்த மணிப்பால் பல்கலைகழகத்திற்கு எதிரே உள்ள குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டின் ஒன்றில் புகுந்த சிறுத்தை, அந்த வீட்டின் முன்புள்ள ஊஞ்சலுக்கு அடியில் பதுங்கியிருந்தது. சுமார் ஒன்றரை நிமிடம் அந்த சிறுத்தை பதுங்கியிருந்தது. அப்போது வீட்டின் உரிமையாளர் ராமச்சந்திர கெடிலயாவின் வளர்ப்பு நாய் டோமி மீது அந்த சிறுத்தை திடீரென பாய்ந்தது. நாயின் கழுத்தை லாவகமாக சிறுத்தை கவ்வியது. அடுத்த சில நொடிகளில் எவ்வித கூச்சலுமின்றி அந்த நாய் இறந்தது போல் மயக்கமடைந்தது.

அதனால் சிறுத்தை தனது பிடியில் இருந்து நாயை கீழே விட்டது. இதற்கிடையில், வீட்டின் உரிமையாளர் ராமச்சந்திர கெடிலயா, சிறுத்தை உருட்டும் சப்தம் கேட்டு விளக்குகளை போட்டார். உஷாரான சிறுத்தை, நாயை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியது. இதை பார்த்த ராமச்சந்திர கெடிலயா, தனது வளர்ப்பு நாய்க்கு என்ன ஆனது? என்று அருகில் சென்று பார்த்தார். அப்போது அந்த நாய் எவ்வித பாதிப்பும் இல்லாதது போல், எழுந்து நின்றது. மகிழ்ச்சியடைந்த ராமச்சந்திர கெடிலயா, சிறுத்தையால் லேசான காயமடைந்த தனது வளர்ப்பு நாயை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது. செத்தது போல் நடித்து சிறுத்தையிடம் இருந்து உயிர்தப்பிய நாயை பலரும் பாராட்டுகின்றனர்.

Related Stories: