×

விடுமுறை தினத்தை பயன்படுத்தி கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள்: பரிதவிக்கும் பயணிகள்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

சென்னை: பயணிகள் கூட்டம் அதிகரித்ததை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு உயர்த்தி பயணிகளிடம் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக ஆம்னி பேருந்துகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. விமான கட்டணத்துக்கு இணையாக ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிக கட்டணம் பெறும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்தும் பயனில்லை என மக்கள் புலம்புகின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். வாரவிடுமுறை, சுதந்திர தினத்தை ஒட்டி பல்வேறு இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருவதற்கு அதிக கட்டணம் செலுத்தும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.

கோவையில் இருந்து ஆம்னி பேருந்துகளில் சென்னை வர வழக்கமான நாட்களில் ரூ.1,200 வரை கட்டணம் இருந்தது; தற்போது ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து சென்னை வர அதிகபட்சமாக ரூ.900 வரை கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.2,800 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதேபோல் மதுரை, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இருந்து சென்னை வருவதற்கு வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு உயர்த்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன.


Tags : Holiday, Toll Robbery, Omni Buses, Passengers
× RELATED விநாயகர் சதுர்த்தி விடுமுறை எதிரொலி...