×

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சி. திருவள்ளூர், செங்கல்பட்டு கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றினர்

திருவள்ளூர்: 76வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட கலெக்டர்கள், தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டும் சமாதானப் புறாக்களையும் பறக்க விட்டும் மரியாதை செலுத்தினார். இதன்பிறகு காவல் துறையினர் அணி வகுப்பை மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கும் தூய்மைப்  பணியாளர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கப்பட்டனர். சுதந்திரப் போராட்ட தியாகிகளும் கவுரவிக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்ட வருவாய் ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் வா.ராஜவேலு, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எஸ்.கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், இன்று காலை 9 மணியளவில் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாக மைதானத்தில் மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத் தேசியக்கொடி ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மூவர்ண கொடி நிறத்தில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. இதில், சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை, மருத்துவத்துறை, நகராட்சி காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், அரசு சார்ந்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட எஸ்பி சுகுணாசிங், டிஎஸ்பி பரத் உள்பட பல்வேறு அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் மேன்வல்ராஜ் தலைமையில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மா.ஆர்த்தி தேசியக்கொடி ஏற்றிவைத்தார். பின்னர் கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட எஸ்பி சுதாகர் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பின்னர் 52 பயனாளிகளுக்கு ₹1.19 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதரா இயக்கம், மகளிர் திட்ட இயக்கம் சார்பில் 4 பயனாளிகளுக்கு ₹44 லட்சம் மதிப்பில் சுயஉதவி குழுக்களுக்கான வங்கிக் கடன், தோட்டக்கலைத் துறை சார்பில் 3  பயனாளிகளுக்கு ₹13,600 உள்பட பல்வேறு துறைகளின் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் மூவர்ண ராட்ச பலூன் மற்றும் அமைதி புறாக்களை கலெக்டர் பறக்கவிட்டார். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் டிஐஜி சத்தியப்பிரியா, மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, தாசில்தார் பிரகாஷ் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊத்துக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

வக்கீல் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அரசு வக்கீல் வெஸ்லி, சங்க  செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கன்னியப்பன், நிர்வாகிகள் பிரகாஷ், சாந்தகுமார், சதீஷ், மூத்த வக்கீல்கள் குணசேகரன், பார்த்திபன், பி.எம்.சாமி, வெற்றிதமிழன், கமலாகரன், பாலு முன்னிலை வகித்தனர். நீதிபதி செந்தமிழ் செல்வன் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் மாலா, துணைத் தலைவர் குமரவேல் முன்னிலையில், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தேசிய கொடியேற்றினார். தலைமை எழுத்தர் பங்கஜம் உள்பட பலர் கலந்துகொண்டனர். டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி சாரதி, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

ஊத்துக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கதிரவன் முன்னிலையில், முன்னாள் பேரூராட்சி தலைவர் அபிராமி தேசிய கொடி ஏற்றினார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ் செல்வம் தலைமையில் பேரூராட்சி துணைத் தலைவர் குமரவேல் முன்னிலையில், தலைமை ஆசிரியர் லோக்நாத் தேசிய கொடி ஏற்றினார். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சுலோச்சனா தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சம்சுதீன் முன்னிலையில், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தேசிய கொடி ஏற்றினார். திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சப் கோர்ட் நீதிபதி கீதாஞ்சலி தேசிய கொடி ஏற்றிவைத்து  மரியாதை செலுத்தி, வக்கீல்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் குற்றவியல் நீதிபதி முத்துராசா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தாடூர் கிராமத்தில் தேசிய கொடி ஏற்றிவைத்து மக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கலந்துகொண்டனர். திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அஸ்ரத் பேகம் தேசிய கொடி ஏற்றிவைத்தார். திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் சரஸ்வதி பூபதி தேசிய கொடி ஏற்றினார். நகராட்சி ஆணையர் ராமஜெயம், நகராட்சி பொறியாளர் கோபு, நகரமன்ற துணைத் தலைவர் சாமிராஜ் கலந்துகொண்டனர். திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், டிஎஸ்பி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். தளபதி மகளிர் கலை கல்லூரி வளாகத்திலும் டிஎஸ்பி தேசிய கொடி ஏற்றிவைத்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். இதில் கல்லூரி தாளாளர் பாலாஜி, பள்ளி முதல்வர் பெருமாள், கல்லூரி முதல்வர் வேதநாயகி, தலைமை ஆசிரியர் சுமதி கலந்துகொண்டனர். திருத்தணி சுதந்திரா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முன்னாள் பேராசிரியர் ரகுராமன் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் மாறுவேட போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், பள்ளி தாளாளர் ரங்கநாதன், ஷியாமளா ரங்கநாதன், பள்ளி முதல்வர் குப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதில் நகர செயலாளர் வினோத்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். திருவாலங்காடு ஒன்றியத்தில் ஒன்றியக் குழு தலைவர் ஜீவா விஜயராகவன் தேசிய கொடி ஏற்றினார். துணைத் தலைவர் சுஜாதா மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். திருத்தணி ஒன்றியத்தில் தங்கதனம் தங்கராஜ் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். வாலாஜாபாத் ஒன்றிய அலுவலகத்தில் இன்று 76வது சுதந்திர தினத்தை ஒட்டி ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.


Tags : Kanji ,76th Independence Day ,Thiruvallur ,Chengalpattu Collectors , Kanchi on the occasion of 76th Independence Day. Thiruvallur and Chengalpattu collectors hoisted the national flag
× RELATED சென்னை, திருவள்ளூர், காஞ்சி உள்பட 16...