கபடியை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கோகோ ஆட்டமும் தொழில் முறை லீக் போட்டியாக அரங்கேற்றம்...

புனே: கபடியை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கோகோ ஆட்டமும் தொழில் முறை லீக் போட்டியாக அரங்கேறியுள்ளது. அதன் முதல் பதிப்பின் முதல் ஆட்டத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. கபடி ஏற்கனவே லீக்கில் கொடிக்கட்டு பறந்து வரும் நிலையில் அதை காட்டிலும் உடல் சக்தி அதிகம் தேவைப்படும் கோகோ விளையாட்டை ஏன் அடுத்த கட்டத்திற்கு முன் எடுக்க கூடாது என்ற சிந்தனையின் விளைவே தொழில் முறை போட்டியாக உருவெடுத்து உள்ளது. மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள பல்வடி உள்விளையாட்டு அரங்கில் முதலாவது தொடர் அரங்கேறியுள்ளது. மும்பை கிளாடிஸ், குஜராத் ஜெயன், சென்னை குய்க்கன்ஸ், தெலுங்கு ஜோதாஸ், ஒடிசா ஜகர்ணட்ஸ், ராஜஸ்தான் வாரியர்ஸ் ஆகிய 6 அணிகளும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு களமிறங்கியுள்ளனர்.                      

 

களத்தில் உள்ள 7 வீரர்களும் எதிர் அணியில் உள்ள 3 வீரர்களையும் துரத்தி துரத்தி அவுட் ஆக்க வேண்டும். ஆனால், அது சாதாரண விஷயம் அல்ல. துரத்துபவரை காட்டிலும் அவரிடமிருந்து அவுட் ஆகாமல் தப்பித்து ஓடுபவருக்கு கூடுதல் சக்தி தேவை. இவ்வாறு தலா 2 இன்னிங்கிஸ் வீதம் 4 இன்னிங்கிஸ்களின் அடிப்படையில் ஒரு ஆட்டத்தின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். எந்த அணி குறைந்த நேரத்தில் அனைத்து வீரர்களையும் வெளியேற்றுகிறதோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் தொடங்கி உள்ள கோகோ தொடரின் 1 லீக் போட்டியில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற மும்பை அணியை, குஜராத் அணி 69-44 என்ற புள்ளிகள் கணக்கில் சாய்த்து அமர்க்களம் படுத்தியது. தமிழர்கள் அதிகம் இடம் பிடித்துள்ள சென்னை குயிக்கன்ஸ் அணியும், தெலுங்கு ஜோதாஸ் அணியும் பலபரிட்சை நடத்தினர். இதில் சென்னை அணி போரடி தோற்றுப்போனது. எளிமையாக காட்சி அளிக்கும் கோகோ விளையாட்டு கிராமப்புற பள்ளி, கல்லூரிகளில் அதிகம் விளையாடும் ஒரு விளையாட்டு ஆகும். செம்மண் தரையில் புழுதி பறக்க விளையாடப்பட்டு இந்த விளையாட்டு இப்போது நவீன வடிவம் எடுத்து உள் அரங்கில் மேட் தரையில் பயணிக்க தொடங்கியுள்ளது. நிச்சயம் மேலும் கிராமப்புற விளையாட்டுகளுக்கு இந்த கோகோ விளையாட்டு ஊக்கமளிக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.  

Related Stories: