போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: நின்றபடி பைக் ஓட்டி வாலிபர் சாகசம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் கைகளில் தேசியக்கொடி ஏந்தி, நின்றபடி பைக் ஓட்டிய வாலிபர் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருவண்ணாமலையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(28). ஊர்காவல் படையில் பணிபுரிகிறார். இவர், ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு சாகச பைக் பயணம் செய்வது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில், நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சாகச ைபக் பயணம் செய்தார்.

அப்போது, சுமார் 40 கி.மீ. வேகத்தில் செல்லும் பைக்கில், அரை கிலோ மீட்டர் தூரம் வரை நின்றபடி பயணம் செய்தார். அப்போது, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்திச் சென்றார். சமமான வேகத்தில் பைக் செல்லும் வகையில் அதை இயக்கிவிட்டு, பைக் இருக்கையின் கடைசி பகுதியில் நின்றபடி சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனாலும், மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள புதிய பைபாஸ் சாலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஏதுமின்றி ஆபத்தான சாகச நிகழ்ச்சியை நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, வாலிபர் சந்தோஷ்குமார் கூறுகையில், ‘பைக் ஓட்டுவதில் தீவிர ஆர்வம் உண்டு. எனவே, அதனை பயன்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்தேன்’ என ெதரிவித்தார்.

Related Stories: