கள்ளக்குறிச்சி அருகே சொர்ணகடேஸ்வரர் கோவிலில் சோழர் கால மன்னர்களில் 2 சிலை மாயம்...

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சொர்ணகடேஸ்வரர் கோவிலில் சோழர் கால மன்னர்களில் 2 முக்கிய சிலைகளில் மாயமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெய்வணை சொர்ணகடேஸ்வரர் கோவிலில் 900 ஆண்டுகள் பழமையான 2 குறுநில மன்னர்களின் கற்சிலைகள் திருடு போய் உள்ளன. அது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களின் வரலாறு குறித்து ஆய்வு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்.

புதுச்சேரியில் உள்ள ஆவண காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள நெய்வணை சொர்ணகடேஸ்வரர் கோவிலில் 1000 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கோவிலில் ஆய்வு செய்வதற்காக வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் சென்றிருந்தார். அப்போது நெய்வணையை தலைமை இடமாக கொண்டு 12ஆம் நூற்றண்டில் ஆட்சி செய்த குறுநில மன்னர்களான ராஜேந்திர சோழ சேதுராயர் மற்றும் விக்கிரம சோழ சேதிராயர் ஆகியோரின் சிலைகளை பார்க்க அவர் ஆர்வம் காட்டினார். 900 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த அந்த 2 சிலைகளும் கோவிலின் கருவரையின் நேர் பகுதியில் இருந்துள்ளது. ஆனால், தற்போது அந்த சிலைகளை காணாது அவர் அதிர்ச்சியடைந்தார்.

அது குறித்து விசாரித்த போது கடந்த 20 ஆண்டுகளாக சிலைகள் அங்கு இல்லாததும் அதனை மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரிய வந்தது. எனவே, அது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் செங்குட்டுவன் புகார் அளித்தார். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது சென்னையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் சிலைகள் மாயம் தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளனர். அதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்கள் பாபு மற்றும் ராஜவேல் ஆகியோர் சிலைகள் திருட்டு போன நெய்வணை கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும், சிலை கடத்தல் ஆசாமிகள் வெளிநாட்டுக்கு கடத்தி சென்றார்களா எனவும் விசாரணை நீடித்து வருகிறது.                     

Related Stories: