எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது; உள்புற ஒற்றுமை மிக அவசியம்: தேசியக்கொடியை ஏற்றி முதல்வர் ஸ்டாலின் உரை..!!

சென்னை: 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். 2வது ஆண்டாக சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை முதலமைச்சர் ஏற்றினார். விழாவில் பேசிய முதல்வர்,

தன்னலமற்ற தியாகத்தால் கிடைத்தது விடுதலை:

எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. நாட்டு விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடியவர் தந்தை பெரியார். மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்த கலைஞரை நினைவு கூர்கிறேன். நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கு எனது வீர வணக்கம்.

சென்னையில் விடுதலை நாள் அருங்காட்சியகம்:

சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் கார்கில் போர் நிவாரண நிதியாக ரூ.6 கோடி திரட்டி வழங்கினார் கலைஞர்.

விடுதலைக்கு முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடு:

இந்தியாவின் விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடு தான். பூலித்தேவன், மருதநாயகம், கட்டபொம்மன் உள்ளிட்டோரின் வீரம் போற்றத்தக்கது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக வளரியால் வாகை சூடியவர்கள் மருது சகோதரர்கள். வேலு நாச்சியார், தீரன் சின்னமலை உள்ளிட்டோரின் வீரம் போற்றத்தக்கது. வ.உ.சி. பாரதியார், சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன் ஆகியோரின் தியாகங்கள் போற்றத்தக்கது. ஆங்கிலேயர்களுக்கு வரி கட்ட மறுத்து எதிர்த்து நின்றவர்கள் தமிழ்நாட்டு மாமன்னர்கள்.

முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு:

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 153 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகியுள்ளது; ஏற்றுமதி, இறக்குமதி அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

மனிதநேய கொள்கைகளுடன் திராவிட மாடல் ஆட்சி:

எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதசார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளம் தான் காந்தி. மகாத்மா காந்தியின் கொள்கைகள் நாட்டுக்கு இன்று தேவையான அவசிய, அவசரமான கொள்கைகள். மகாத்மாவின் மனித நேய கொள்கைகள் கொண்ட திராவிட மாடல் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்று நாட்டுக்கு மீண்டும் மீண்டும் அடையாளப்படுத்த வேண்டியவராக உள்ளார் மகாத்மா காந்தியடிகள். தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனின் கோரிக்கையையும் நிறைவேற்றித் தர ஆசைப்படுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்:

அரசு ஊழியர்களுக்கு 3சதவீதம்  அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 16 லட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும்.

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.20,000ஆக உயர்வு:

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.18,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.10,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் அறிவித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டிய சகோதரர்களின் வழித் தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வ.உ.சி.,  சிவகங்கை முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி வழித் தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வெங்கிடுபதி எத்தலப்பருக்கு நினைவு மண்டபம்:

விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங்கிடுபதி எத்தலப்பருக்கு திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்க ரூ.2.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டத்தில் அரங்கம் அமைக்க ரூ.2.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பில் கடலூரில் தியாகி அஞ்சலையம்மாளுக்கு சிலை அமைக்கப்படும்.

உள்புற ஒற்றுமை மிக அவசியம்:

தேசியக் கொடியின் நிறம் மூன்றாக இருந்தாலும் அவை ஒரே அளவில் இணைந்து காணப்படுகிறது. இதைப்போல பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவை காக்கும். வெளிப்புற சக்திகளின் தாக்குதலை வெல்ல வேண்டும் என்றால் உள்புற ஒற்றுமை மிக மிக அவசியம். அனைத்து மக்களின் அரசாக தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: