டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: வானிலிருந்து பொழிந்த 'பூ'மழை..!

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி பிரதமர் மோடி ஏற்றினார். நாட்டின் 75வது சுதந்திர தின விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதை கோலாகலமாக கொண்டாடும் வகையில், ஒன்றிய அரசு அமிர்த பெருவிழாவாக ஓராண்டுக்கு கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடை வதையொட்டி, பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, நாடெங்கிலும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி, 75ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், நாட்டின் 76வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனிடையே டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். செங்கோட்டையில் தொடர்ச்சியாக 9வது முறையாக பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றியுளார். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக, சுதந்திர தின விழா கொண்டாட்டம் களை இழந்திருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்த விட்டதால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் பங்கேற்க 7,000 பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி, செங்கோட்டையில் உச்ச கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

1000 கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காட்டும், முக அடையாள கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செங்கோட்டையை சுற்றிலும் டிரோன்கள், பட்டம், கருப்பு பலூன், சீன லாந்தர் விளக்குகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டங்களை பிடிக்க 400 போலீசார் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஓட்டல்கள், ஓய்வு விடுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

Related Stories: