அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ‘டிவிட்’ செருப்பு வீசிய சின்ட்ரெல்லா வந்து பெற்றுக்கொள்ளலாம்: சமூக வலைதளத்தில் வைரல்

மதுரை: தனது கார் மீது வீசப்பட்ட செருப்பின் புகைப்படத்தை இணைத்து நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செருப்பை வீசிய சின்ட்ரெல்லா வந்து பெற்றுக்ெகாள்ளலாம் என தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையின் போது உயிரிழந்த திருமங்கலம் ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்றுமுன்தினம் மதுரை வந்தது. இங்கு அவரது உடலுக்கு, நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அரசு சார்பில் மரியாதை செலுத்தி விட்டு செல்லும் வழியில் அவரது காரை, பாஜவினர் முற்றுகையிட்டனர்.

அப்போது கார் மீது பாஜ மகளிர் நிர்வாகிகள் செருப்பை வீசினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘‘பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை. இது சரியான தருணம் இல்லை’’ என கூறியிருந்தார். இந்நிலையில், தன் கார் மீது வீசப்பட்ட செருப்பின் புகைப்படத்தை இணைத்து பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று ஒரு டிவிட் வெளியிட்டுள்ளார். அதில், “நேற்றைய சம்பவம் தொடர்பாக நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டும்.

அதைப் பின்பு சொல்கிறேன். இப்போதைக்கு.... பாதுகாக்கப்பட்ட பழைய விமானநிலையப் பகுதியின் 100 மீட்டர் வரை, தனது கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட சின்ட்ரெல்லாவுக்கு ஒரு தகவல். உங்களது காலணி வேண்டும் என்றால் வந்து பெற்றுக் கொள்ளலாம். எனது ஊழியர்கள் அதைப் பத்திரமாக வைத்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு டிவிட்டரில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கிண்டலாக பதிவிட்டிருப்பது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி  வருகிறது.

Related Stories: