இந்தாண்டு இறுதிக்குள் கீழடியில் அருங்காட்சியகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

விருதுநகர்: கீழடி அகழாய்வு அறிவியல்ரீதியாக சரியான இடத்தில் நடைபெற்றதால்தான் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடி அருங்காட்சியக கட்டிடப்பணி நிறைவு பெறும் தருவாயில் இருப்பதால், இந்தாண்டு இறுதிக்குள் அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைப்பார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் அருகே மல்லாங்கிணற்றில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அளித்த பேட்டி:

கீழடி அகழாய்வு பணிகள் சரியான இடத்தில் நடைபெறவில்லை என வரும் தகவல்கள் தவறு. கீழடியில் 2017 முதல் 2021 வரை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை மூலம் 3 கட்ட அகழாய்வு பணிகள் நடந்தன. தமிழக தொல்லியல்துறை மூலம் 4 முதல் 8வது கட்ட அகழாய்வு வரை நடைபெற்று வருகிறது. இதில், சுடுமண் உறைகிணறுகள், கூரை வீடுகள் கொண்ட சமுதாயம் இருந்ததற்கான ஓடுகள், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. கார்பன் பகுப்பாய்வில் கீழடி நாகரிகம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக 580 ஆண்டுகள், அதாவது கிமு 6ம் நூற்றாண்டைச் சார்ந்தது என நிரூபணமாகி உள்ளது.

சங்க காலம் என்பது கிமு 6ம் நூற்றாண்டில் இருந்ததற்கான கருத்தும், சங்க காலத்தில் எழுத்தறிவு பெற்ற நகர நாகரிகம் இருந்ததும் உறுதியாகி உள்ளது. 5ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான தொடர்ச்சி, பல்வேறு பொருட்களும் கிடைத்தன. இந்திய புவி காந்தவியல் நிறுவன விஞ்ஞானிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டோம். இதன் தொடர்ச்சியாக 8ம் கட்ட அகழாய்வில் நிறைய பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கிடைத்துள்ளன. ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வு முழுக்க, முழுக்க அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் இடத்தேர்வுடன் நடந்துள்ளது. கீழடியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு, ரூ.12 கோடியிலான அருங்காட்சியகம் கட்டிட பணிகள் 98 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. பொருட்களை தேர்வு செய்வது, விளக்க உரைகள், ஒலி, ஒளி அமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் முதல்வரால் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: