சென்னையில் பி.டெக் படித்து வந்தவர் போதைக்கு அடிமையான மகனை கூலிப்படை ஏவி கொன்ற தந்தை: ஆந்திராவில் பயங்கரம்

திருமலை: ஆந்திராவில் போதைக்கு அடிமையான மகனை கூலிப்படை ஏவி கொன்ற தந்தை உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தில் உள்ள குத்திகிபந்த தண்டாவைச் சேர்ந்தவர் ரெட்டப்ப நாயக். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் தாகூர் நாயக் (22), சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார். போதைக்கு அடிமையான இவர், வீட்டில் இருந்து அடிக்கடி தங்க நகைகளை திருடி விற்று, மது, கஞ்சா வாங்கி பயன்படுத்தினார். தட்டிக் கேட்ட  தந்தை, தம்பியை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால், தாகூரால் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படும் என பயந்த ரெட்டப்ப நாயக், மகனை கொல்ல திட்டமிட்டார். பெங்களூரு விமான நிலையத்தில் காவலாளியாக பணிபுரியும் தனது மைத்துனர் சேகர் நாயக்கிடம் தாகூரை கொன்றால் ₹2 லட்சம் தருவதாக பேரம் பேசி, ₹50 ஆயிரம் முன்பணம் கொடுத்துள்ளார். தனது கூட்டாளியான பிரதாப்புடன் கடந்த ஜூன் 28ம் தேதி சென்று, தாகூரை மது கொடுத்து 2 பேரும் கழுத்தை நெரித்து கொன்றனர். ஜூலை 2ம் தேதி அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 இந்த கொலை பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், மகன் காணாமல் போய் 2 மாதமாகியும் புகார் செய்யாத ரெட்டப்ப மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தாகூரை கொலை செய்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து, பிரதாப் நாயக் (23), சேகர் நாயக் (27),ரெட்டப்ப நாயக்கை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Related Stories: