தனியார் வங்கியில் ரூ.20 கோடி நகை கொள்ளையில் 3 பேர் அதிரடி கைது 18 கிலோ தங்கம் மீட்பு

சென்னை: சென்னையில் தனியார் நகைக் கடன் வழங்கும் வங்கியில் நடந்த ரூ.20 கோடி நகை கொள்ளையில் தனிப்படை போலீசார் 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கும்பலை சேர்ந்த மற்றவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது. சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலை ரசாக் கார்டன் பகுதியில் பெட் பேங்க் என்னும் தங்க நகைகளுக்கு கடன் வழங்கும் பிரபல  தனியார் வங்கி உள்ளது.

மாலை, வங்கியின் மண்டல மேலாளராக பணிபுரிந்த சென்னை பாடியை சேர்ந்த முருகன் என்பவர் தனது கூட்டாளிகள் 3 பேருடன் நேற்று முன்தினம் வந்தார்.

பின்னர், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்தார். அதை குடித்த அவர்கள் மயங்கியதும், ஒரு அறையில், 3 பேரையும் கை, கால்களை கட்டிபோட்டு விட்டு லாக்கரில் இருந்த சுமார் 20 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை மூன்று பைகளில் அள்ளிப் போட்டு கொண்டு பைக்கில் தப்பினர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 6 தனிப்படை அமைக்கப்பட்டு  முக்கிய குற்றவாளியான முருகன், அவரது கூட்டாளி பாலாஜியை கைது செய்ய ஆந்திரா, கர்நாடகா, உ.பி மற்றும் பெங்களூருக்கு விரைந்துள்ளனர்.  

இதனிடையே கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கியின் மேலாளர் சுரேஷ், காவலாளி சரவணன், முருகன் மனைவி மற்றும் தாயார் உள்பட 20க்கும் மேற்பட்டவர்களிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்  அடிப்படையில், நகை கொள்ளையை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகளில் ஒரு  குழுவினர் நேற்று திருவண்ணாமலையில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களுக்கு, திருவண்ணாமலையில் யாராவது  நண்பர்கள் உள்ளனரா, அடைக்கலம் கொடுத்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆனாலும், கொள்ளையர்கள் திருவண்ணாமலைக்கு வந்ததற்கான  உறுதியான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என்பதால், தனிப்படையினர் மீண்டும்  சென்னைக்கு திரும்பியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனின் கூட்டாளி மற்றும் சந்தோஷ், சக்திவேல் என்ற 3 பேரை தனிப்படையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு

அரும்பாக்கம் கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் தனிப்படை போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு லட்சம் பரிசு  வழங்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். பொதுமக்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். டிஜிபி அலுவலகம் கண்ட்ரோல் அறை எண்: 044-28447703 மற்றும் சென்னை மாநகர கண்ட்ரோல் அறை எண்: 044-23452324.

Related Stories: