சென்னை, மதுரை, கோவை கோட்டங்களுக்கு புதிதாக 442 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டம்: போக்குவரத்து துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: சென்னை, மதுரை, கோவை ஆகிய அரசு போக்குவரத்துக்கழக கோட்டங்களில் பயன்படுத்துவதற்காக புதிதாக 442 பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்துக் கழகங்களின் பல்வேறு நவீன வசதிகள் புகுத்தப்பட்டு வருகின்றன. காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பேருந்துகளை வாங்கி பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் 442 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட நடவடிக்கையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழக போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறோம். இதன் ஒருபகுதியாக போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலாவதியான பேருந்துகளை ஈடு செய்யவும், காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையிலும் பிஎஸ் 6 ரக பேருந்துகளை பயன்படுத்தும் வகையிலும் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை கோட்டங்களுக்கு 442 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இவை அனைத்தும் டீசல் மூலம் இயங்கும் குளிர்சாதன வசதியில்லா தாழ்தள பேருந்துகள். கேஎப்டபிள்யூ திட்டத்தின் கீழ் இந்த பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பேருந்துகளை தயாரித்து வழங்க தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் உள்ள நிறுவனங்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் வகையில் அறிவிக்கை வெளியிட்டுள்ளோம். இதில் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க அக்.12ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: