போதைப்பொருட்களை ஒழிக்கும் அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதை நிறுத்த வேண்டும்: எடப்பாடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

சென்னை:  மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கை எடுக்கும்போது எதிர்க்கட்சி தலைவரான பழனிசாமி ஏன் இப்படி பதறுகிறார் என்று தெரியவில்லை. போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து அதிகாரிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து, அந்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. வழக்கமான இந்த நடைமுறையை  தேவையின்றி விமர்சித்துள்ளார்.

கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் பொருட்டு 1.1.2021 முதல் 31.7.2021 வரையிலான காலக்கட்டத்தில் 3,555 வழக்குகள்,  164 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள், 1.1.2022 முதல் 31.7.2022 வரையிலான காலக்கட்டத்தில் 5,028 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 339 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021 (மே மாதம்) வரை கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது பதிவு செய்யப்பட்ட வெறும் 135 வழக்குகளில் மட்டுமே சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 14 மாத கால ஆட்சியில் மட்டும் 332 வழக்குகளில் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் வழக்குகள் பதிவு செய்துள்ள நிலையில், தனக்கு மேலே தொங்கும் கத்தி எப்போது விழுமோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த புள்ளி விவரங்களை எடுத்துக் கூறினால் புரிந்துகொள்வார். அல்லது புரிந்தும் புரியாதது போல நடிப்பார். எனவே, போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை அறவே ஒழிக்கவும் அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு துணை புரியாவிட்டாலும், முட்டுக்கட்டை போடுவதையாவது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் உள்ள பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: