சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கை 565 லாட்ஜ்களில் தங்கிய 2,662 பேரிடம் விசாரணை

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை முழுவதும் 565 லாட்ஜ்கள், மேன்ஷன்களில் நடந்த அதிரடி சோதனையில் 2,662 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சுதந்திர தின விழாவை  சீர்குலைக்கும் வகையில் தீவிரவாத அமைப்புகள் சிலர் திட்டமிட்டுள்ளதாக  ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளது.

புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சென்னை முழுவதும் 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட விமான நிலையம், வணிக வளாகங்கள், பேருந்து நிலையம், கடற்கரை பகுதிகள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கியுள்ள நபர்களை பிடிக்கும் வகையில் சென்னை முழுவதும் உள்ள 565 லாட்ஜ்கள், மேன்ஷன்களில் நேற்று

 முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தங்கியிருந்த 2,662 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதோடு இல்லாமல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும் ‘எப்ஆர்எஸ்’ கேமரா மூலம் குற்றப்பின்னணிகள் குறித்து சோதனை செய்யப்பட்டது.

மேலும், சென்னை மாநகரம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி வாகன சோதனையில் 4,265 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 76 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: