நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு: கோட்ைடயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார்

சென்னை:  75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் தடுக்க தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி பல்வேறு துறைகளில் சாதணை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார்.

75வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல் சம்பவங்கள் நடத்தலாம் என்று ஒன்றிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நாட்டின் மிக நீளமான கடற்கரையை கொண்டுள்ள தமிழகத்தில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் 12 கடலோர மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லைகளில் ரோந்து கப்பல்கள் மூலம் கண்காணித்து மீனவர்களின் படகுகளும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அணு உலைகளை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய பேருந்து நிலையங்கள் என தமிழகம் முழுவதும் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி அனைத்து மண்டலங்கள், மாவட்டங்களிலும் எஸ்பிக்கள் தலைமையில் 1 லட்சம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். 2021ம் ஆண்டு முதல் சுதந்திர தினத்தினத்தன்று தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த `தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இந்த விருதுடன் ₹10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

அதேபோல், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள், கோவிட்-19 தடுப்பு பணிக்கான சிறப்பு பதக்கம் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

முன்னதாக, தேசியக்கொடி ஏற்ற வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்படுகிறது. பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் முதல்வர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுகிறார்.

Related Stories: