முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார்.

கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க  விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை அழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதாக இருந்தது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் டெல்லிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் மோடி தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்று வருவதாக பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் எம்பிக்கள் குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி கடந்த மாதம் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார்.

கடந்த மாதம் 28ம் தேதி முதல் கடந்த 9ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் நடந்தது. இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,  தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இதுபோன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் 16ம் தேதி (நாளை) காலை 10.35 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அன்று இரவு அவர் டெல்லியில் தங்குகிறார். மறுநாள் (17ம் தேதி) பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

பிரதமரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கி தருமாறு மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சந்திப்பின்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்பித்ததற்கு நேரில் நன்றி தெரிவிக்க உள்ளார். மேலும், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி அளித்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார். ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

இவை தவிர, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்றும் தெரிகிறது. இதனால், பிரதமர் மோடியுடனான முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 17ம் தேதி இரவு 8.20 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

Related Stories: