இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வல்லமை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது; ஆர்.எஸ்.பாரதி புகழாரம்

திருவொற்றியூர்: இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வல்லமை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது, என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

மாதவரம் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் தலைமையில் மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியில் நேற்று நடைபெற்றது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர் ஆகியோர், ஆர்.கே.நகர் திமுக வட்ட செயலாளர் மறைந்த சம்பத் குடும்பத்தாருக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி, மற்றும் மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்கள் 500 பேருக்கு அரிசி, புடவை மற்றும் நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில்,‘‘சமீபத்தில் பிரபல பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில் இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் பிடித்துள்ளார், என்பது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. 5 முறை முதல்வராக இருக்கக்கூடிய நவீன் பட்நாயக் முதலிடத்திலும், ஒன்றரை ஆண்டு காலமே முதல்வராக இருக்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது இடத்திலும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது மிகப்பெரிய சாதனையாக இந்திய அரசியல் உற்று நோக்குகிறது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வல்லமை மிக்க தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்,’’என்றார். நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், நிர்வாகிகள் தாமரைச்செல்வன், பரந்தாமன், கவுன்சிலர் காசிநாதன், மஞ்சம்பாக்கம் பாபு, அஜய் தென்னவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: