தேச துரோக புழுக்களை அழிக்க ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு

ஆலந்தூர்: தேச துரோக புழுக்களை அழிக்க ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம், என முன்னாள் மத்திய அமைச்சர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.  

தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக சுதந்திரதின விழாவையொட்டி அம்பத்தூர், மதுரவாயல், ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாக, 75 கி.மீட்டர் தொடர் பாத யாத்திரை நடந்து வருகிறது. நேற்று இந்த யாத்திரை நங்கநல்லூரில் இருந்து புறப்பட்டது. தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் யாத்திரையை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

முன்னதாக அவர் பேசுகையில், ‘‘75வது சுதந்திர தின பவளவிழாவிற்கு தேசத்திற்கு துரோகம் செய்தவர்கள் மூவர்ண கொடியை தூக்கிப் பிடிப்பதில் நியாயமில்லை. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில் தேசிய கொடியினை கட்டிச்செல்கிறார். அதன் மீது பாஜவினர் செருப்பு வீசுகிறார்கள். தேசியக்கொடியின் மீது மரியாதை இருந்திருந்தால் செருப்பை வீசி இருப்பார்களா. வீசிய செருப்புக்கு என்ன மரிமாதையோ அது தான் அவர்களுக்கும்.

தேசத்துரோக புழுக்களை அழிக்க நாங்கள் ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம். காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கு கொடியை பிடிக்கவும் தெரியும். கொடியை திருப்பிப்பிடித்து தடியாக மாற்றவும் தெரியும். பெருந்தலைவர் காமராஜர் வீட்டிற்கு தீ வைத்தவர்கள்தான் இன்று காமராஜரை புகழ்ந்து பேசுகிறார்கள். பாஜ தலைவர் அண்ணாமலை கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர், தமிழ்நாட்டில் திமுகவை அழிக்க கங்கனம் கட்டிவருகிறார்கள். ஸ்டாலினை அழிக்க நினைத்தால் அவர்கள்தான் அழிந்து போவார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர்கள் நாசே ராமச்சந்திரன், பொன். கிருஷ்ணமூர்த்தி,  பொதுச்செயலாளர்கள் டி.செல்வம், ரங்கபாஷ்யம், தளபதி பாஸ்கர், முன்னாள் மாவட்ட தலைவர் சிவராமன், மாமன்ற உறுப்பினர் மோ.பானுபிரியா, மாநில செயலாளர்கள் எம்.ஜி.மோகன், கமலிகா‘காமராஜ், கலைப் பிரிவு மாநில தலைவர் கே.சந்திரசேகரன், மாவட்ட துணைத் தலைவர் அய்யம் பெருமாள், மாவட்ட பொருளாளர் பீர் முகம்மது, ஆலந்தூர் பகுதி தலைவர்கள் தனசேகரன், கோகுல கிருஷ்ணன், பன்னீர்செல்வம், பகுதி தலைவர்கள் இரா. மோகனரங்கன், மோகன் குமார், பி.டி.ரோமியோ, லோக பிரான், பச்சையப்பன், எம்.ஜி.முரளி, கிறிஸ்டோபர், முருகன், மோகன் பாபு, ஜெகன், குணசீலன், மற்றும் பகுதி தலைவர் வி.ரமேஷ், தனசேகரன், பாலமுருகன், கனிபாண்டியன், முகப்பேர் ஜி‌.பிரபாகரன், ஆர்.பகத்சிங் மோகனகிருஷ்ணன் கே.ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: