சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் போல் நடித்து பயணிகளிடம் நகை பறிப்பு; இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது

மீனம்பாக்கம்: இலங்கையை சேர்ந்த பெண்கள் நதிஷா ரோஷினி (47), வசீகா (45) ஆகிய இருவரும் கடந்த 8ம் தேதி அதிகாலை இலங்கையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தனர். இவர்கள், பல்வேறு சோதனைகள் முடிந்து வெளியே வந்துள்ளனர். அங்கிருந்து மெட்ரோ ரயிலில் மண்ணடி செல்ல, விமான நிலைய கார் பார்க்கிங் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, டிப்டாப் உடையணிந்த 2 பேர், இலங்கையை சேர்ந்த 2 பெண்களையும் நிறுத்தி, நாங்கள் சுங்கத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகள். நீங்கள் அணிந்துள்ள அதிக நகைகளுக்கு டியூட்டி கட்டாமல் வெளியே வந்துள்ளீர்கள். மீண்டும் அலுவலகத்துக்கு வந்து கட்டணம் செலுத்துங்கள் என மிரட்டியுள்ளனர்.

பின்னர் நதிஷாவிடம் இருந்து 59 கிராம் நகைகளை வாங்கிக் கொண்டு, அலுவலகத்துக்கு வந்து கட்டணம் செலுத்தி நகைகளை வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டுச் சென்றனர். அதன்படி, 2 இலங்கை பெண்களும் சுங்கத்துறை அலுவலகத்துக்கு சென்று விசாரித்தபோது, அதிகாரிகள் யாரும் இதுபோன்று நகையை பெறவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தங்களிடம் நகைகளை பறித்தது போலி ஆசாமிகள் எனத் தெரியவந்தது.

புகாரின்பேரில் சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் பார்க்கிங் பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இலங்கை பெண்களிடம் நகைகளை பறித்த 2 பேரும் பல்லாவரத்தில் ஒரு வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் பல்லாவரத்துக்கு போலீசார் விரைந்துசென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில்,  இலங்கையை சேர்ந்த முகமது நஜ்மீர் (31), செல்லையா அரவிந்தன் (40) எனத் தெரியவந்தது. மேலும், நதிஷா உள்பட விமான நிலையத்தில் தனியே வரும் பல பெண்களிடம் இருவரும் சுங்கத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகளாக நடித்து நகைகளை பறித்து வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 125 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: