டாக்டர் மாப்பிள்ளை எனக்கூறி வரன் தேடும் பெண்களிடம் பல லட்சம் நூதன மோசடி; வாலிபர் கைது

வேளச்சேரி: வரன் தேடும் பெண்களிடம் டாக்டர் மாப்பிள்ளை எனக்கூறி பல லட்சத்தை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் பெற்றோர், தங்களது மகளுக்கு திருமணம் செய்ய, பிரபல திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளனர். இதை பார்த்து, தினேஷ் கார்த்திக் என்ற வாலிபர், அந்த இளம்பெண்ணின் பெற்றோரை செல்போனில் தொடர்பு  கொண்டு பேசியுள்ளார்.

அப்போது,‘‘நான் எம்பிபிஎஸ் படித்துவிட்டு புதுச்சேரியில் டாக்டராக பணியாற்றி வருகிறேன். வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். உங்களது மகளை திருமணம் செய்ய விரும்புகிறேன்,’’என்று கூறியுள்ளார். அவரது பேச்சு, இளம்பெண்ணின் பெற்றோருக்கு பிடித்துவிட, அவரிடம் அவ்வப்போது, செல்போனில் பேசி வந்துள்ளனர்.

அப்போது, இளம்பெண்ணிடம் பேச வேண்டும், எனக்கூறி அவரது செல்போன் எண்ணை அந்த வாலிபர் கேட்டுள்ளார். இதையடுத்து, இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், இளம்பெண்ணை தொடர்புகொண்ட அந்த வாலிபர்,‘‘அவசர தேவையாக பல லட்சம் தேவைப்படுகிறது,’’என்று கூறியுள்ளார். திருமணம் செய்யப்போகும் நபர்தானே என்று நம்பி அந்த இளம்பெண், ரூ.13 லட்சம் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொடுத்துள்ளார். சில நாட்களில் அந்த வாலிபரின் செல்போன்  சுவிட்ச்ஆப் செய்யப்பட்டது. பல நாள் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண்  அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரனிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க அவர் உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீசார்,   அந்த வாலிபரின் ‌செல்போன் டவர் லொக்கேஷனை வைத்து கண்காணித்தினர்.

அதில், அவர் பாண்டிச்சேரியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து, அடையாறு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், விருதுநகர் மாவட்டம், காரியம்பட்டியை சேர்ந்த தினேஷ் கார்த்திக் (28) என்பதும், இவர் திருமண தகவல் மையத்தில் வரன் கேட்டு பதிவு செய்ததும், அதில், தனது புகைப்படத்திற்கு பதிலாக டாக்டர் உடையில் உள்ள மாடல் துறையில் உள்ள நபரின் படங்களை போலியாக பதிவு செய்ததும் தெரியவந்தது. மேலும், அந்த திருமண தகவல் மையத்தில் இருந்து பல பெண்களின் செல்போன் எண்களை பெற்று, அவர்களிடம் இனிக்க இனிக்க பேசி, நூதன முறையில் பல லட்சங்களை அபேஸ் செய்தது தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து, ரூ.98 ஆயிரம், மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் ஏமார்ந்த பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: