பெண்கள் பாதுகாப்புக்கு தற்காப்பு கலை; அசத்தும் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி

பெண் குழந்தைகளை நாம் எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும், அவர்களுக்கு ஆபத்து என்பது எங்கே, எந்த ரூபத்தில் இருந்து வரும் என்றே தெரியாது. வயது வரம்புகள் இல்லாமல் பல நேரங்களில் பெண்களிடம் அத்துமீறும் செயலில் பலரும் ஈடுபடுகின்றனர். சாலைகளில், பேருந்துகளில், பணிபுரியும் இடங்களில், சில நேரங்களில் சொந்த வீட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விடுகிறது. எனவே இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு படிப்புடன், தற்காப்பு கலையும் அவசியமாகிறது. இதற்காகவே, நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு 6ம் வகுப்பு முதலே படிப்புடன் சேர்த்து தற்காப்பு கலையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இதுகுறித்து, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை கூறுகையில்,‘‘மார்ஷல் ஆர்ட்ஸ் எனும் தற்காப்பு கலையை வாரத்தில் 2 முறை எங்கள் பள்ளி மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்கிறோம். இதற்கென பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வெளியே இருந்து வரவழைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில், காலை 7 மணி முதல் 8.30 மணி வரை மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எங்கள் பள்ளியில் கடந்த 5 வருடமாக இந்த கலை கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. தன்னார்வத்துடன் 50 மாணவிகள் கற்று வருகின்றனர். தற்போதைய சூழலில், பெண்களுக்கு படிப்பு மட்டும் போதாது. எந்த சூழலிலும் தனியாக தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்த தற்காப்பு பயிற்சி நிச்சயம் அவர்களுக்கு உதவும்’’என்றார்.

பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி பெற்றுவரும் 10ம் வகுப்பு மாணவி தீபா கூறுகையில்,‘‘நான் 6ம் வகுப்பில் இருந்து மார்ஷல் ஆர்ட்ஸ் கற்று வருகிறேன். பள்ளியில் சேர்ந்த பின்பு தான் இதை கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் வந்தது. மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மார்ஷல் ஆர்ட்ஸ் மொத்தம் 10 லெவல், நான் இதில் 4வது லெவலை கடந்து பச்சை பெல்ட் வாங்கி இருக்கிறேன். கருப்பு பெல்ட் வாங்குவதே என் இலக்கு. மார்ஷல் ஆர்ட்ஸில் ஸ்டேட் லெவல் போட்டியில் கலந்துகொண்டு சில்வர் மெடல் வாங்கி இருக்கிறேன். தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று சிறந்து விளங்குவேன்’’என பெருமிதத்துடன் கூறினார். 12ம் வகுப்பு மாணவி ரேஷ்மா பர்வீன் கூறுகையில்,‘‘நான் தற்போது 12ம் வகுப்பு படிக்கிறேன்.

6ம் வகுப்பு சேர்ந்ததில் இருந்து மார்ஷல் ஆர்ட்ஸ் கற்று வருகிறேன். இன்றுவரை என் பெற்றோர்கள் அரவணைப்பில் இருக்கும் நான், அடுத்து மேல் படிப்பிற்காக வெளியே செல்லும் நிலை ஏற்படும். ஏதேனும் சில சந்தர்ப்பங்கள் நமக்கு எதிராக அமையும், அந்த நேரங்களில் இந்த தற்காப்பு பயிற்சி எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். மார்ஷல் ஆர்ட்ஸில் நல்ல முறையில் பயிற்சி பெற்று வருகிறேன். இதுவரை எனது பாதுகாப்பிற்காக நான் இந்த கலையை பயன்படுத்தியது இல்லை. ஆனால் என்றாவது, ஏதாவது ஒரு சூழலில் இது எனக்கு கைகொடுக்கும். பொதுவாக, இஸ்லாமிய பெண்கள் வெளியே செல்ல கூடாது, ஆண்களை போல எந்த விளையாட்டுகளிலும் கலந்துகொள்ள கூடாது என்ற வரைமுறைகள் பல வீடுகளில் இருக்கும். ஆனால் என் வீட்டில் அப்படி இல்லை. என் பெற்றோர்கள் எனக்கு எல்லா விஷயத்திலும் உறுதுணையாக உள்ளனர். தற்காப்பு கலை கற்றுக்கொள்வதில் அவர்கள் அதிகமாக ஊக்குவிக்கின்றனர்’’என்றார்.

Related Stories: