இன்று நாட்டின் 75-வது சுதந்திர தினம் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள் தியாகத்தை போற்றுவோம்; அரசியல் கட்சி தலைவர்கள் சூளுரை

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் தியாகத்தை போற்றுவோம் என அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர்): இந்த சுதந்திர நன்னாளில் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் அனைவரையும் போற்றுவோம். வீடு தோறும் தேசியக்கொடி ஏற்றி நமது சுதந்திர உணர்வை, தேசப் பற்றை வெளிப்படுத்துவோம். ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக ஒருங்கிணைப்பாளர்): நாட்டின் விடுதலைக்காக போரா டிய அத்தனை வீரர்களையும், வீராங்கனைகளையும், தியாகிகளையும் நாம் நினைத்து போற்றுவோம். அனைவரும் உழைத்துப் பாரதம் பாரினில் சிறக்கப் பாடுபடுவோம்.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஜாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து சமூக நல்லிணக்கத்தோடு இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணித்தால்தான் அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும். இத்தகைய சூழல் ஏற்படுவதற்கு தேசிய அளவில் அரசியல் மாற்றம் ஏற்பட ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். ராமதாஸ் (பாமக நிறுவனர்): அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க கடுமையாக உழைப்பதற்கு உறுதியேற்க வேண்டும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): முன் எப்போதுமில்லாத வகையில் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை உயர்த்தி பிடிப்போம். பன்முகம், மதச்சார்பின்மை, அரசியல் சாசனம் பாதுகாப்போம். விடுதலை போர்க்கால விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம். ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): இந்நன்னாளில் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம். இந்தியாவை வல்லரசாக  மாற்ற உறுதியேற்போம்.

அன்புமணி (பாமக தலைவர்): சிறப்புமிக்க விடுதலையை நாடும், நாட்டு மக்களும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால், போதை, மது, சூது ஆகிய மூன்று சமூகக் கேடுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்; அவை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க விடுதலை நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்றுக் கொள்வோம். மமக தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ தலைவர் நெல்லை முபாரக், சமக தலைவர் சரத்குமார், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட பல்வேறு கட்சியினர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: