1947ல் செங்கோட்டையில் பறந்தது குடியாத்தத்தில் தயாரான முதல் தேசியக்கொடி

சுதந்திர இந்திய கனவு நனவாகும் நிலையில், செங்கோட்டையில் ஏற்றுவதற்கான முதல் தேசிய கொடியை, அந்தக் காலத்திலேயே கைத்தறியில் புகழ்பெற்று விளங்கிய வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒன்றிய அரசு செயலாளர், அதிகாரிகள் குடியாத்தம்  நகருக்கு வந்ததனர். குடியாத்தத்தில் 1932ல் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் நகராட்சித் தலைவராக இருந்தவர் ஆர்.வெங்கடாச்சலம். அவர் மூலம் பிங்கல வெங்கையா வடிவமைத்த தேசியக்கொடியை கைத்தறியில் தயாரிக்கும் பணி நடைபெற்றது. 12 அடி அகலம், 18 அடி நீளத்தில் மொத்தம் 3 கொடிகள் கம்பீரமாக உருவாக்கப்பட்டன. அந்த தேசியக்கொடிகளுள் ஒன்றுதான் 1947 ஆகஸ்ட்  15ம் தேதி ெடல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது. இதே போன்ற மற்றொரு கொடி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் ஏற்றப்பட்டது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்ட கொடி வளாகத்தில் உள்ள தொல்லியல் ஆய்வுத்துறை அருங்காட்சியகத்தின் 2ம் தளத்தின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, அன்று நாடு முழுவதும் ஏற்றுவதற்காக 10 லட்சம் கொடிகள் குடியாத்தம் நகருக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதற்காக, குடியாத்தம் நெசவாளர்கள் மட்டுமின்றி, இதர மக்களும் கொடிகளை இரவு பகலாக தயாரித்தனர். ஒரு சில நாள்களுக்குள் கொடிகள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மகத்தான செயலை மகாத்மா காந்தி, நேரு, காமராஜர், அம்பேத்கர் போன்ற தேசத் தலைவர்கள் பாராட்டினார்கள். குறிப்பாக, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றவுடன் வெங்கடாசலத்துக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்தநிலையில், நாட்டின் 75வது அமுத சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வீடுதோறும் தேசிய கொடி பறக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் குடியாத்தத்தில் தற்போது தேசிய கொடி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய கொடியை முதலில் தயாரித்து தந்த குடியாத்தம் நகரம் பெருமை அடைவதுடன் வேலூர் மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Related Stories: